Tuesday, 9 September 2008

உருமாற்றம்

பேசப் பொருள் இல்லாத

இடைவெளியில் நீ என்னை விட்டுச் சென்றாய் .

எப்போதும் அலையும் என் மனதில்

பாடு பொருளுக்குக் குறைவில்லை .

உனக்காக கோர்த்த வார்த்தைகள்

உன் ஒரு வார்த்தை வேண்டி காத்திருந்தன,

என்னுள்ளே அமிழ்ந்தும்

என்னைப் புறந்தள்ள நினைத்தும் .

நம் இடைவெளிகள் வடிவமைத்தன

என் வார்த்தைகளை .

அவற்றில் இப்போது நீ இல்லை.

உனக்கான காத்திருப்பும் இல்லை.

உருமாறிவிட்ட உன் வெளியை

உனக்கென தந்தபடி

வேறுதிசை நோக்கி எனது பிரவாகம்.

அதில் மிதந்து செல்லும்

சொல்லாமல் விட்ட சில கோடி வார்த்தைகள்

அவை அழிவதற்காய் தோன்றியவை.