Wednesday 30 July, 2008

உறவுகள் உதிர்ந்த போழ்து

உன் உறவுதிர்ந்த காலம் அது . நன்றாய் நினைவிருக்கிறது உதிரும் உறவு கிழித்த வலி அறியமாட்டா உன் விலகிச்சென்ற வேர்கள் . தனித்தும், தொலைந்தும் தொலைவிலும் நின்ற நான். இழப்பென்பது தனிமை. அடைக்குள்ளே உடைந்துபோன பறவையின் ஓலம் மழையின்றி மண்ணான பயிரின் ஓலம் இதில் எத்தனை நீ அறிவாய்? அதனால் சொல்கிறேன் இழப்பு தனிமை. இழக்காதவரை தனிமை தெரிவதில்லை.

Wednesday 16 July, 2008

மலிவுப்பதிப்பு

கட்டாயக் கல்யாணம் போல் இது ஒரு கட்டாய நிழற்படம். முதலும் கடைசியுமாய் தனந்தனியே படமெடுக்க நிறுத்தப்பட்டார் ஓய்வுதியதுக்கு பதினாறாம் நாள் ஒப்பாரிக்கு என அவர் மனதுக்குள் பல கணக்குகள் ஓடியிருக்கும் நான் எப்போதும் பிரிக்க நினைத்து சண்டையிடும் நஸ்யம் பிடித்த இரு விரல்கள் வேஷ்டி முந்தியில் சொரசொரக்கும் வாழைத்தடை அதற்குள்தான் அதன் மொத்த இருப்பு மடித்த விரல்களுக்குள் இருக்கும் இடைவிடாத உஷ்ணம் முக்காலே மூணு வீசம் மூடிவிட்ட மூசுக்குழாயில் தட்டி மோதி வந்து விழும் சுவாசம் தொட்டால் ஓட்டும் நெல் பூச்சி வண்ணம் போல் மிக நெருக்கத்தில் கிட்டும் நச்யத்தின் சுகந்தம் இங்கே எப்போது சவரம் செய்வாய்? என இழுத்துக் கேட்ட மார்போடிய வெண்மயிர் கற்றையின் ஸ்பரிசம் எதுவும் இல்லாத இது தாத்தாவின் இருப்பின் ஆக உணர்ச்சியற்ற மலிவுப்பதிப்பு சட்டமிடப்பட்ட வாழ்வின் எச்சம்.