Monday, 28 June, 2010

அண்டை வீட்டார்

நண்பரின் தயவில் அறுபதுகளில்   அச்சிடப்பட்ட அண்டைவீட்டார் புதினத்தின் நகல் கிடைத்தது. இத்தகைய புத்தகங்களை தேடிப்படிக்கும் நிலையில் நான் இல்லை. எனவே வாசல் தேடி வந்த புத்தகம் வீடு தேடி  வந்த விருந்து. 

புத்தகத்தைப்பற்றி  சொல்லும் முன் ஒன்றைச் சொல்ல வேண்டும். கதையின் மூலமொழியும் மொழிபெயர்ப்பு நடையும் எத்தனை பொருந்தியவை என்பது தெரியவில்லை. ஆனால் வாசகனுக்கு ஒரு நாயர் தரவாட்டில் நுழைவதில் எந்த சிக்கலும் இல்லை.அவ்விதத்தில் நல்ல மொழிபெயர்ப்பு என்றே நினைக்கிறேன்.

இரண்டு கிழவர்கள் திண்ணை மீது அமர்ந்து கொண்டு நாட்டு நடப்புகளை பேசிக்கொள்வதும்  ஊர் புரணி பேசுவதும் போன்ற மொழிநடை இந்த கதைக்கு வாய்த்திருப்பது கதையை நமக்கு அன்யோன்யப்படுத்துகிறது. எந்த கதையும் காலத்தின் முன்னகர்வை தவிர்த்து வரமுடியாது. ஆனாலும் சில கதைகள் காலனகர்வை அடிப்படை ஆக கொள்கின்றன. மங்கலசேரி தரவாட்டு   காரணவர்கள் ,காரணவத்திகள் வழியாக காலம் நகர்கையில் முக்கோணக்கரையும் தன் பங்குக்கு மாறுகிறது .வெள்ளப்பெருக்கை காண பத்மநாப பிள்ளை வெளியேறுகையில் குஞ்சுவரீது தரவாட்டுக்குள் தயை வேண்டி ஏறி வர எத்தனிப்பது வெறும் நிமித்தம் மட்டும் அல்ல. கதையின் சாரமும் அதுத்தான். கால வெள்ளம் ஓடுகையில் அது தன் காய்களை இடமாற்றிக்கொண்டே இருக்கிறது. ஒரு சமூகம் தன் அடுத்த நிலைக்கு நகர்கையில் அறம் சார்ந்த கலகத்தை ஏற்ப்படுத்தாது விடுவதில்லை.  அறம் சார்ந்த கலக்கம் சிந்திக்கும் அனைத்து மனிதனுக்கும் நிகழ்காலத்துடன் இருந்துகொண்டே இருக்கிறது. வாழ்கின்ற காலம் இதற்கு
 ஒரு தடை இல்லை. அதைத்தான் புத்தனிலும் , 'காலம் கெட்டு போச்சு' எனும் மூதாட்டியின்  அயர்விலும் காண்கிறோம். 
என்றால் இந்த கலக்கம் தொடர்ந்து வருவது. எந்த கோட்பாடும் இதற்கு முற்றுப் புள்ளி வைக்க இயலாது. இந்த இயலாமை இந்நாவலின் மூல ஸ்வரம்.  தன் வீட்டுக்குள் அடைக்கலம் தரும் அதே பத்மநாப பிள்ளை வயலில் தன்னை கைதாங்க வரும் புலையனை  'சீ ' என்று புறம் தள்ளுகிறார். அவரின் ஜாதி ஒழிப்பு அடைக்கலம் தரும் வரை தான். மாறிவரும் காலம் அவருக்குள் மாற்ற முடிந்தது அவ்வளவே. 
ஈழவ, நாயர் சண்டைகளும் அத்தோடு நசியும் ஊரு,ம் இரு தரவாடுகளும் மாறி வரும் காலத்தின் பொது பிம்பங்கள்.  இந்த பொது பிம்பங்களுக்குப் பின் தான் எத்தனை மனித மனங்கள். மானம் பெரிதென்று திரும்பிப்பார்க்காமல் இறங்கிப்போகிறான் குஞ்சன். 'அவருக்கு மூன்று பெற்றேனே, என்னிடம் கூட சொல்லவில்லையே'  என்று கல்யாணி கலங்கும் போது விதி பாரபட்சமில்லாததாகிறது. மங்கலசேரி தரவாட்டில் வாழ்வு முடிவுக்கு வருகையில் அது தரவாட்டின் வாரிசுகளை அள்ளிக் கொண்டு போகிறது. அதில் தப்பிப் பிழைக்க ஒரே வழி விலகிச் செல்லுதல் தான்.  பத்மநாப பிள்ளையின் அடுத்த தலைமுறைக்கு தரவாட்டு பாரம்பரியம் ஒரு பொருட்டல்ல என்றாகிறது. இந்தக் கருத்து  மாற்றம் ஒரு தலைமுறையை நிர்மூலமாக்கி பின் வருகிறது. ஒரு தலைமுறையின் வதைகளை , துன்பங்களை , சுய அர்ப்பணிப்பை காலால் இடறி விட்டு வாழ்வின் சாத்தியங்களை நோக்கி எவ்வித குற்ற உணர்ச்சியுமின்றி முன்னேரிச்செல்கிறது வாழ்ந்திருப்பதர்க்கான பேராவல். சரோஜினி பித்து பிடித்து சாவை நோக்கி செல்கையிலும் அவள் சாவிலும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் தன் வியாபாரத்தை கவனிக்க அவளை வீட்டில் பூட்டிச் செல்லும் ராஜசேகரனின் தலைமுறை மங்கலசேரி வீட்டில் வாழ்வின் களியாட்டத்தை மீட்டெடுக்கிறது.  வாழ்ந்திருப்பதே  வாழ்வின் மிகப்பெரும் அறமா?    தனி மனிதன் தன் சுயதேடலில் கண்டெடுக்கக வேண்டிய அப்பெரும் பொருளை முன்வைக்கும் கேள்வியே இப்புதினம்.