அழுத பிள்ளையை
எடுக்காத மாமியார் ,
சொத்து தகராறில்
கணவனை
சிலாந்தி மரத்துக்கு
உரம் வைப்பேன் என்ற
கொழுந்தன்
சொந்த நகையில்
சீர்செய்து அனுப்பியும்
கணவன் சாவுக்கு வராத
நாத்தனார்
வளர்த்த நன்றி மறந்து
மகனுக்குப் பெண் தராத
உடன்பிறந்தான்
வடித்த சோற்றில்
பங்கு தராத
மருமகள்
அதைக் கண்டுகொள்ளாத
மகன்
எத்தனை முறை சொன்னாலும்
முடியாத நெடுங்கதை.
காலம் காலமாய்
தலைமுறைகள் தோறும்
மனதுக்குள் அறுத்துக் கொண்டிருக்கும்
பெருங்காயம் .
இம்முறை ஆச்சியால்
எனக்கு சொல்லப்பட்டது .
ஒரு பாணனின் கரிசனத்தோடு
காற்று அதை எடுத்துச் செல்கிறது
அடுத்த தலைமுறையின்
நினைவுகளில் கலந்துவிட ...