Saturday 29 May, 2010

Kaaval kottam

மதுரையின் மனிதர்களின்   கதை 

மனிதன் தன் கடந்த காலத்தின் தொகை. அவனின் அறியா கடந்த காலம் வாழ்வின் ஒவ்வவொரு கணத்திலும் வந்து போகிறது. இறந்த காலத்தை முழுவதுமாய் அறுத்துவிட்ட மனிதன் பைத்தியமாகிறான். அதனால் தான் வரலாறு அவனுக்கு இன்றியமையாதது என்றாகிறது. வரலாற்றை அதிகம் பொருட்படுத்தாத நம் இனத்துக்கும் தலைமுறைக்கும் அதனுள்ளிருந்து வெளியெடுக்க சுவாரசியமாய் ஏதுமில்லை. காலையில் உண்ணும் இட்லிக்கும் சட்டை பொத்தானுக்கும் வரலாறு இருந்தாலும் பெரிதாய் என்ன போய்விட்டது?

இப்படி ஒரு சூழலில் ஒருவர் பொறுமையாய் ஒரு ஆயிரம் ௦௦௦ பக்க புதினம் படைப்பது மனவலியை சோதிக்கும் முயற்சிதான். அதனாலேயே காவல் கோட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.இந்நாவல் குறித்த சர்ச்சைகளுக்குள் நான் போகவில்லை. நாவலை படித்த பின் வாசகன் எடுப்பதும், விடுவதும், 'நியாயமான' வாதங்களை முன் வைப்பதும் அவனவன் உரிமை. விமர்சனம் விதண்டாவாதமாய் இல்லாதவரை இலக்கியத்துக்கு அனுகூலம் தான்.
அறுநூறு ஆண்டு கால வரலாறு ஒரு இனத்தின் வாழ்வுடன் அதன் ஏற்ற இறக்கங்களிநூடே பிணைந்து செல்லும் புனைவுதான் காவல் கோட்டம். இன்றைய தமிழகத்தின் பண்டைய தலை நகரங்களில்  காஞ்சிக்கும் தஞ்சைக்கும்  ஜனரஞ்சக வரலாற்று புதினங்கள் உள்ள நிலையில் மதுரைக்கு ஒரு பெருங்கதை சொல்லப்படவில்லை. இப்புனைவு ஜனரஞ்சகம் எனும் நிலை தாண்டியது. இது வரலாற்றை  மன்னன் வழி அல்லாமல் அதன் சகடங்களை தாங்கி முன்னகர்த்தும் ஒருவழிப்பாதை பற்றியது. வரலாற்றின் பின் நிற்கும் கோடிக்கணக்கான அறியாமுகங்களின்  வழி சொல்லப்பட்ட கதை இது
பிரம்மாண்ட கற்பனையும் பெரும் புனைவு மொழியும் கூடிய படைப்பு என்று நான் கருதவில்லை. ஆனால் கதையின் கருவுக்கு தேவையான படைப்பு மொழி கூடிவந்த படைப்பிது. களவுக்கும் காவலுக்கும் இடையே ஆடிச்சென்ற  வாழ்க்கைகளின் சாரத்தை எளிமையாய் சொல்லிச்செல்லும் மொழி. தாதநூர் கள்ளர்கள் பேசிய மொழி.
கதையில் உண்மைக்கு புறம்பான ஏதேனும் உண்டா என நான் தேடவில்லை. இது கதை. என்றாலும் பெருமளவு வரலாற்றுடன் ஒத்திருப்பதாகவே கருதுகிறேன் .
மதுரையின் விதி கைகள்  மாறி வந்துகொண்டே இருக்கிறது.இஸ்லாமியர் கையில் செல்லும் மதுரையில் தொடங்கும் கதை ஆங்கிலேயர் கையில் முழுமையாய் அடங்குவது வரை நீள்கிறது. கதைகள் வாழ்வின் அடிப்படை ஆகிவிட்ட ஒரு சமூகத்தின்  கதை அதனோடு இணைந்து கொள்கிறது. மதுரை என்பது ஒரு ஊர் அல்ல.  அது ஒரு தொல் அடையாளம். காண்பவனின் காட்சிக்கு இணங்க தன்னை தகவமைத்துக் கொள்ளும் அதிசய உயிர்  அது.  காலங்களின் நீட்சியுடன் மதுரை மாறுகையில் அதன் பகல் மட்டும் மாறவில்லை. கடந்த கால மதுரையின் பாதி அதன் இரவுகள். இந்நாவல் அதன் இருளுக்குள் சூல் கொண்டு பிறந்து வந்த தலை முறைகளின் வாழ்க்கை.அதனால் தான் இருள் குறித்த மொழி அவ்வார்த்தைக்கு முப்பரிணாமம் கொடுத்து உலவ விடுகிறது. இருள் ஒரு கதா பாத்திரமாக  வருகையில் அதன் படைப்பில் ஆசிரியனின் உச்ச கட்ட படைப்பு திறன் வெளியாகிறது.
கதையின் பெண் பாத்திரங்கள் கட்டற்றவர்கள். தங்களின் எல்லையை தானே நிர்ணயிக்கும் காட்டாறுகள். சடச்சி எனும் மூதாய் தலைமுறை தோறும் பெண்கள் சொல்லும் கதைகளின் வழி நின்று  தன மக்களை காத்து வருகிறாள். அவளுக்குள் இருந்த ஆங்காரம் அவள் வழிப் பிள்ளைகள் அத்தனை பேருக்குள்ளும் உள்ளது. மாறும் காலம் சடச்சியை வெறும் நினைவாக்குகிறது. மூதாயின் வாக்கின் மீது வாழ்பவர்கள் வாழ்க்கையை முன்னெடுக்க கதைகளின்றி போகும் ஒரு பேய்க்காலம் வந்து சேர்க்கிறது. மத மாற்றத்துடன் வேர்களை இழந்த போதகர்  டேவிட் சாம்ராஜ்  தன் இனத்தோடு மீண்டும் உறவு கொள்கையில் சடச்சியின் பிள்ளைகளில் ஒருவனை உருவியெடுத்து தன் ஆயுதமாக்கி கொள்கிறது ஆங்கில அரசாங்கம். அதிகாரம் தன்னை நிலை நிறுத்த ஆடும் ஆட்டத்தில் உணர்வுகள் பகடைகள் ஆகின்றன. டேவிட் சம்ராஜின் மறைவுக்கு பின் அலறியழும் மேரிக்கு மட்டுமே இவ்வுண்மை தெரிகிறது. காவலை இழந்து களவுக்கும் வழியிழந்த சடச்சி மக்கள் பட்ட சாமிகளுடன் தனித்து விடப்படுகின்றனர். சாதிக்கும் அதிகாரத்துக்கும் தொன்று தொட்டு இம்மண்ணில் இருந்துவரும் உறவுமுறையை எவ்வித பூடகமும் இல்லாமல் முன்வைக்கும் நாவல் அதற்கான காரணத்தை கோடிட்டு செல்கிறது.
மதுரையின் நாட்கள் வழியே வழிந்தோடும் ஆயிரக்கணக்கான வாழ்க்கைகளின் சில துளிகளை வெவ்வேறு காலகட்டங்களில் இருந்து கோர்த்தெடுத்து புனையப்பட்ட கதையிது .ஒரு சில விமர்சங்கள் மூலம் புறந்தள்ள வேண்டிய நாவல் அல்ல காவல் கோட்டம்  என்பது என்  உறுதியான எண்ணம். 


No comments: